வியாழன், 11 மார்ச், 2010

முக்கியமான செய்தி

சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக என்னுடைய பிளாக் url ஐ மாற்றி உள்ளேன்:-)

http://senreb.blogspot.com/

மலர்வனத்தின் பார்வையாளர்கள் சிரமம் பாராமல் இந்தப் புது url க்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் _()_
சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஞாயிறு, 7 மார்ச், 2010

செய்திக்கு சென்ஸார் வருமா?

சமீபமாக மீடியாக்களிலும், பத்திரிக்கைகளிலும் அடிபடுவது சாமியாரைப் பற்றிய செய்தி தான்.

பெட்டிக்கடைகளில் இருந்து ஐடி ஆபீஸ் வரை இது தான் பேச்சாக உள்ளது. திரும்ப திரும்ப பலமுறை ஒரு சினிமாக் காட்சியைப் போன்று மீடியாக்கள் போட்டி போட்டுக் கொண்டு காட்டியது. வந்த விருந்தினர்கள் முன்பு செய்தியைப் பார்க்கவே நெளியும் நிலை. குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு செய்தியைக் கூட நாம் பயமின்றி பார்க்க முடியுமாங்கிறது இப்ப சந்தேகமா இருக்கு.

பூட்டிய கதவுக்குள் நடந்தவற்றை அநியாயம், அயோக்கியத்தனம் என்று சொன்னவர்கள், அதை மறைத்து வைத்த காமிராவால் படம் எடுத்தது எந்த அளவு அயோக்கியத்தனம்? அந்த நிகழ்ச்சி ஒன்றும் இன்று, நேற்று புதியதாக நடந்தது போல் தெரியவில்லை. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது மட்டும் வெளியில் வர என்ன காரணமோ? அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கு வேண்டாம்!!

ஒரு சாமியார் இவ்வாறு செய்யலாமான்னு கொதித்து எழும் மக்கள் தானே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியது? சாமியைக் கும்பிடலாம். அதற்கு எதற்கு இடைத்தரகர்கள்? என்னை சாமியாராக்கு, என்னை நம்புன்னு எநத சாமியார் சொல்கிறார்? யாரோ ஒருவர் எதையோ சொல்லப் போக, அதுவும் தற்செயலாக நடக்க அவர் சொல்வதெல்லாம் நடக்குதுன்னு ஒரு கோஷ்டி கிளப்பி விட்டு சுயலாபம் பார்க்கிறாங்க.

மக்களும் அதை நம்பி காசு, பணம்னு கொட்ட வேண்டியது. அப்பறம் அந்த சாமியாரைப் பற்றி ஏதாவது உண்மை தெரிய வரும் போது ஆத்திரப்பட்டு எல்லாவற்றையும் அடித்து நொறுக்குவது. திருந்தணும்னு நினைச்சிருந்தா ஒரு பிரேமானந்தா பற்றிய உண்மை வந்த போதே, எந்த சாமியார்களையும் மக்கள் ஏறெடுத்தும் பாராமால் இருந்திருந்தால், இன்று இப்படி அவன் அயோக்கியன், இவன் அயோக்கியன்னு சொல்லும் நிலை வந்திருக்குமா? தவறு முழுவதும் தம்மிடம் வைத்துக் கொண்டு ஏமாற்றுவர்களை குறை சொல்லி என்ன பயன்?

ஆங், நான் சொல்ல வந்தது இதுவே இல்லை.

செய்திகள் என்றால் நாட்டு நடப்பு, உலக நடப்புகளை தெரிந்து கொள்வதற்கு என்றிருந்த காலம் போய், செய்திக்கிடையே இப்படிப்பட்ட படங்களைக் காட்டினால் பெரியவர்கள், குழந்தைகள்னு உட்கார்ந்து எப்படி செய்திகளைப் பார்ப்பது?

இது போன்ற படங்களைக் காட்டும் செய்திகளுக்கும் இனி சென்ஸார் வருமா?

வெள்ளி, 5 மார்ச், 2010

குறிப்பு திருட்டு

சமீப காலமாக ஏதாவது ஒரு தளத்தில் யாராவது ஒருவரால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை (சமையல் குறிப்புகள் உட்பட) எடுத்து கொஞ்சம் மாற்றியோ இல்லை அப்படியேவோ தனது பெயரில் வேறு தளத்துக்கு கொடுப்பது அதிகமாகி விட்டது. எதற்காக இந்த திருட்டு வேலை? பெயரும், புகழும் வேண்டியா? அப்படி வேண்டுமாயின், தன் சொந்த குறிப்புகளை, திறமையை கொடுக்க வேண்டியது தானே? இப்படி திருட்டுத்தனம் செய்து பேர் வாங்கச் சொல்லி யார் கேட்கிறார்கள்? கஷ்டப்பட்டு சொந்தக் குறிப்புகள் கொடுத்தவர்களின் மனது என்ன கஷ்டப்படும்?

கொஞ்ச நாள் முன்பு தான் தோழி ஜலீலாவின் குறிப்புகள் எடுக்கப்பட்டு வேறு பிளாக்கே வந்தது என்று சொன்னார்கள். குறிப்புகள் கொடுப்பவர்கள் எல்லாரும் எல்லா இடத்திலும் செக் பண்ணிக் கொண்டா இருக்க முடியும்?

நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் நம்மோடு போகாமல், பலருக்கும் பயனளிக்கட்டுமேன்னு தான் சொல்றோம். தேவையானவங்களுக்கு அந்த லின்க்கை கொடுத்து படிக்க சொல்ல வேண்டியதுதானே! தனக்கே வேண்டுமென்றால், பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளட்டுமே! அதை விட்டு என்னவோ தானே கஷ்டப்பட்டு கொடுத்த குறிப்பு போல் கொடுத்து இப்படி பேர் சம்பாரிக்க நினப்பது அவர்களுக்கே கேவலமாக இல்லையா?

எது எதைத்தான் திருடுவது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. இன்னும் எவ்வளவு பேர் என்ன சொன்னாலும், இது போல் திருடுபவர்கள் மாறுவது போல் தெரியவில்லை.

அவங்க அவங்க குறிப்புகளை பத்திரமாக லாக்கரில் வைத்து பூட்டி வைத்துக் கொள்ளுங்கப்பா. இப்படி சொல்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்:-) திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிறது இதற்கும் பொருந்துமோ?

(அறுசுவை.காம் தளத்தில் உள்ள  என்னுடைய பல குறிப்புகள் பலராலும் திருடப்பட்டு வெவ்வேறு தளங்களில் வேறு பெயர்களால் பதியப்படுவதைக் கண்டு ஏற்பட்ட மன உளைச்சலின் வெளிப்பாடே இந்தப் பதிவு:-( )